கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை கண்டித்து, தமிழகமெங்கும் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியினர் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பாக, தமிழ்ச்சாலையில் உள்ள விவிடி சிக்னல் அருகில் மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்கள் எழுப்பினர்.
மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் தேன்மொழி பேசுகையில், இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மது, போதைப்பொருள் போன்றவற்றில் சிக்கிக்கொள்வதால்தான் இத்தகைய அருவருப்பான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கும் பழக்கவழக்கங்களை விட்டு விலகி, நல்ல குடிமக்களாக உருவாக வேண்டும். சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் தடுக்க குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் தக்ஷனா, மகளிர் அணி மாவட்டத் தலைவர் வெள்ளத்தாய், வடக்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் ஜமுனா, பிரச்சாரப் பிரிவு மாவட்ட செயலாளர் அனுசுயா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமன், வாரியார் முத்துராமலிங்கம், மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் விவேகம், ரமேஷ், ராஜா, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக