சென்னை. டிச.15:
சென்னை தலைமையிடமாகக் கொண்டு பெண்கள் மற்றும் திருநங்கை போக்குவரத்து தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் வீர பெண்கள் முன்னேற்ற சங்கம், இந்திய அளவில் பெண்கள் மற்றும் திருநங்கை போக்குவரத்து தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கமாக பதிவு செய்த முதல் அமைப்பு என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இச்சங்கத்தைச் சேர்ந்த மோகன சுந்தரி மற்றும் லீலா ராணி நடித்துள்ள “ஆட்டோ குயின்ஸ்” என்ற குறும் ஆவணப்படம், உலகப் புகழ்பெற்ற International Documentary Film Festival Amsterdam (IDFA) விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த மதிப்புமிக்க சர்வதேச ஆவணப்படத் திருவிழாவில், பெண்கள் நடத்தும் போக்குவரத்து கூட்டுறவை மையமாகக் கொண்டு உருவான முதல் தமிழ் குறும் ஆவணப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது. Omidyar Network நிறுவனத்தின் நிதியுதவியுடன் Storiculture நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த நிலையில், “ஆட்டோ குயின்ஸ்” ஆவணப்படத்தின் சென்னை திரையிடல் இன்று (14.12.2025) நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் வீர பெண்கள் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். பத்திரிக்கையாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள், ஓட்டுநர்கள், கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டு ஆவணப்படத்தை பார்வையிட்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
ஆவணப்படத்தின் இயக்குநர் ஸ்ரயந்தி பேசுகையில், “மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருந்தபோதும், IDFA-வில் பல நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் படத்தின் சாராம்சத்தை தெளிவாக உணர்ந்து எதிர்வினை தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அந்த அனுபவம் மறக்க முடியாதது” எனக் குறிப்பிட்டார்.
வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மோகன சுந்தரி மற்றும் பொருளாளர் லீலா ராணி ஆகியோர் பேசுகையில், “பல இன்னல்களுக்கிடையிலும் பெண்கள் ஆட்டோ ஓட்டுநர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களுக்கு தனிப்பட்ட ஆட்டோ ஸ்டாண்டுகள், முறையான பார்க்கிங் வசதி, மெட்ரோ நிலையங்களில் பிக்கப்–டிராப் வசதி, அவசர தேவைகளுக்கான கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தினால், இந்தத் துறையில் பெண்களின் பங்கேற்பு மேலும் அதிகரிக்கும். தனியார் நிறுவனங்களும், தன்னார்வலர்களும் நிதியுதவி வழங்கினால், மேலும் பல பெண் ஆட்டோ ஓட்டுநர்களை உருவாக்கும் எங்களது முயற்சிக்கு பெரும் துணையாக இருக்கும்” என்றனர்.
ஆவணப்படத்தை பார்வையிட்ட பலரும், பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்த தங்களது பார்வை நேர்மறையாக மாறியுள்ளதாக தெரிவித்ததுடன், படக்குழுவிற்கும் சங்கத்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பெண்கள் மற்றும் திருநங்கை போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டங்கள், துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றை உலக அரங்கில் எடுத்துச் சொல்லும் முக்கியமான சமூக ஆவணமாக “ஆட்டோ குயின்ஸ்” படம் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக