நிரந்தர தீர்வு ஏற்பட திட்டமிட்டபடி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை:-
தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வணிகர்கள் மகாஜன சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா பகுதிகள் நிறைந்த மாவட்டம் ஆக திகழ்கிறது. இங்கு உள்ள கடற்கரை அழகு மற்றும் திருவள்ளுவர் சிலை, தொங்கு பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பகுதிகளை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் வந்து செல்கிறார்கள்.
அதேபோன்று இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் பொருட்கள் துறைமுகம் மூலமாகவும் விமானம் மூலமாகவும் வாகனங்கள் மூலமாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இமயம் முதல் குமரி வரை என்று இந்திய வரலாற்றில் பெருமையுடன் கூறப்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து இருந்தாலும் சாலை போக்குவரத்து வசதியில் மிகவும் பின்தங்கி இருப்பது அனைத்து தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இன்றும் நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்கள் போக்குவரத்து நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறம் வழியாக செல்லும் சாலைகள் அனைத்தும் மிகவும் குறுகிய சாலைகளாக ஆக்கிரமிப்புகள் நிறைந்த சாலைகளாக உள்ளன.
இதனால் 80 அடி அகலம் முதல் நூறு அடி அகலம் வரை இருக்க வேண்டிய சாலைகள் 40 அடி சாலைகளாக மாறி இருப்பதால் வாகனங்கள் சாலைகளில் சிரமப்பட்டு செல்கின்றன. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகத்திற்கு செல்வோர் என கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
சாலைகள் அவ்வப்போது மாநகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பணிகள் நடைபெறுவதால் அதன் முழுமையான நோக்கம் நிறைவேறாமல் உள்ளது எனவே நாகர்கோவில் நகர்ப்புற உட்புறசாலைகள் மற்றும், அனைத்து முக்கிய ஊரகச் சாலைகளையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தி, சென்டர் மீடியங்கள், சிக்னல்கள் ஏற்படுத்தி மாற்றி அமைக்க வேண்டும்.
மாநகராட்சியாக தரம் உயர்ந்து இருந்தாலும் இன்றும் சாலை வசதியில் தரம் உயராமல் நாகர்கோவில் நகரம் இருப்பது மாவட்டத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள சமூக ஆர்வலர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாற்கர சாலை திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது மேலும் பொது மக்களை பாதித்துள்ளது.
இந்தியாவில் 1999 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் டெல்லி, கொல்கத்தா ,சென்னை, மும்பை நகரங்களை இணைக்கும் திட்டமாக ஏற்படுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, முதல் களியக்காவிளை வரை அமைக்க திட்டமிடப்பட்ட நாற்கர சாலை திட்டம் 1041 கோடியில் திட்டமிடப்பட்டது.
இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டது.
இந்தத் திட்டம் வந்தால் நகர்ப்புற பகுதிகளுக்குள் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் நாற்கர சாலை வழியாக செல்லத் தொடங்கிவிடும்.
இதனால் நகர்ப்புறங்களில் உள்ள உட்புற சாலைகள் போக்குவரத்தின நெருக்கடியில் சிக்குவது மேலும் தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிற்கும் நாற்கர சாலை திட்டம் கை கொடுக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த திட்டம் 56 சதவீதம் மட்டுமே நிறைவேறி உள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்ட படி 2026 ஏப்ரல் மாதம் முடிக்கப்படுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு சாலைகளின் தேவை அத்தியாவசியமானது.
திட்டங்கள் நிறைவேற்றுவது தாமதமாவது நிதிச் சுமையை அதிகரிக்கும். மக்களின் சிரமங்களை அதிகரிக்கும். விபத்துக்கள் இழப்புகள் ஏற்படுவதை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஆமை வேகத்தில் நடைபெறும் நாற்கர சாலை பணிகள் அனைத்தையும் விரைவு படுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி சாலைகள் விரிவாக்கம் செய்வதை தீவிர படுத்த வேண்டும். இமயம் முதல் குமரி வரை என்ற வார்த்தை சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் காட்டும் விதமாக குமரி மாவட்டத்தை வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக உருவாக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வளர்ச்சிக்கு கை கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக