டிச.23, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா எதிரில் அமைந்துள்ள மதுரா கோட்ஸ் மில் வளாகம் அரசுக்கு சொந்தமான நிலமாக இருக்கும் நிலையில், அந்த இடத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த மதுரா கோட்ஸ் மில், சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை செயல்பாடுகளை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து, அந்த நிலத்தை விற்பனை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது வேலவன் ஹைபர் மார்க்கெட் நிறுவனம் அந்த இடத்தை பெற்றுக்கொண்டு, பிளாட் போட்டு விற்பனை செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “மதுரா கோட்ஸ் அரசு நிலம் மீட்பு” அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், மதுரா கோட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் அந்த நிலம், அரசு ஆவணங்களின் படி “சர்க்கார் புறம்போக்கு (அரசு நிலம்) என பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அரசு நிலத்தை மோசடியாக ஆவணங்கள் தயாரித்து, பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும், அந்த பத்திரப்பதிவு முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2025 டிசம்பர் 5ஆம் தேதி, தூத்துக்குடி கீழூர் சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ஆவண எண் 6288 மற்றும் 6291 ஆகிய இரண்டு ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடி பத்திரங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து பத்திரப்பதிவு செய்த நபர்கள் மற்றும் இதில் தொடர்புடைய அனைவர்மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
மேலும், இந்த நிலத்திற்கு தொடர்பாக உள்ளூர் திட்ட குழுமம் (Local Planning Authority) எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் பத்திரப்பதிவு நகலை அடிப்படையாக கொண்டு பட்டா பெயர் மாற்றம் எதுவும் செய்யக் கூடாது என்றும் மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரா கோட்ஸ் மில் வளாகத்தில் உள்ள கட்டிடம் பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் என்பதால், அதை இடிக்கவும் எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் வக்கீல் சிலுவை, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரி செல்வம், காந்தி மள்ளர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, அரசு நிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக