கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் தலைமையில், அதிகாரிகள் சக்திமுருகன், சங்கரநாராயணன் உள்ளிட்ட குழுவினர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகள் என மொத்தம் 12 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனையின் போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 12.500 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக இரண்டு உணவகங்களுக்கு தலா ₹5,000 வீதம் மொத்தம் ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன இறைச்சி, நூடுல்ஸ், சாதம் மற்றும் உருளைக்கிழங்கு மசாலா என சுமார் 95 கிலோ பழைய உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன.
சுகாதாரமற்ற முறையில் உணவுகளைப் பராமரித்த 4 உணவகங்களுக்கு தலா ₹3,000 வீதம் மொத்தம் ₹12,000 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுத் தரம் குறித்தோ அல்லது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்தோ பொதுமக்கள் புகார் அளிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக