பொங்கலை முன்னிட்டு சிலம்பு தற்காப்புக் கலை செயல்விளக்கம் – பொதுமக்கள் உற்சாகம்.
தாராபுரம், திருப்பூர் மாவட்டம்:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் முக்கியமானதாக விளங்கும் சிலம்பாட்டம், உடல் வலிமை, மன உறுதி மற்றும் தற்காப்புத் திறனை ஒருங்கிணைக்கும் சிறப்புமிக்க கலையாக திகழ்கிறது. பல நூறு ஆண்டுகளாக தமிழர் பண்பாட்டின் அடையாளமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கலையை இன்றைய நவீன கணினி யுகத்தில் இளம் தலைமுறையினர் மறந்து விடும் சூழல் உருவாகி வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இந்த நிலையில்,, தாராபுரம் புது காவல் நிலைய வீதியில், முருகன் கோவில் அருகே, ஸ்ரீ மதுரை வீரன் சிலம்பப் பயிற்சி கூடத்தின் 49-ஆம் ஆண்டு பயிற்சி விழாவை முன்னிட்டு, சிலம்பு தற்காப்புக் கலை செயல்விளக்கம் நிகழ்ச்சி இன்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, சிலம்பு பயிற்சியாளர் மோகன் தலைமை ஏற்று நடத்தினார். பிஜு-ஜை-கா ஸ்ராங்கஸ்ட் கராத்தே-டூ இந்திய ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, சிலம்பம் சுற்றுதல், தீப்பந்தம் சுற்றுதல், கத்தி சண்டை, தற்காப்பு நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினர்.
சிலம்பாட்டம் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்லாமல், உடல் சுறுசுறுப்பையும், மன ஒழுக்கத்தையும் வளர்க்கும் முழுமையான தற்காப்புக் கலையாகும். கை, கால், கண், மனம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் இந்தக் கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயதுபேதமின்றி அனைவரும் கற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சிலம்பப் பயிற்சி மூலம் உடல் எடையை கட்டுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், கவனம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்தல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் சிலம்பாட்டத்தை மீட்டெடுத்து, இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சியில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி பயிற்சி அளித்து வரும் ஆசான்களின் பங்கு பாராட்டத்தக்கதாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியை காண, தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, மாணவ–மாணவிகளின் திறமையை கண்டு கைதட்டி உற்சாகப்படுத்தினர். பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வளர்க்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக