ஜன.28, தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தினசரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கு சங்கத்தின் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தென் மாவட்டங்களில், தூத்துக்குடி வணிகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்கிறது. தூத்துக்குடியில் ஒரு துறைமுகம், அனல் மின் நிலையம், பல்வேறு தொழிற்சாலைகள், ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் உப்பு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தாயகமாக உள்ளது.
ஏராளமான தொழில் முனைவோர் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி பயணம் செய்கிறார்கள்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் பேர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எனவே, சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று சங்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் லோகமான்ய திலக், மதுரை வாராந்திர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் இதனால் மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுக்கு பயணிகளுக்கு வசதியான பயணத்தை எளிதாக்கும். மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில்களை இயக்க வேண்டும்.
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
இது கேரள மாநிலத்திற்குள் உள்ள பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக