திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் “ஊர் கட்டுப்பாடு” என்ற பெயரில் ஒரு குடும்பத்தையும், அதனை ஆதரித்த நபரையும் சமூக ரீதியாக ஒதுக்கி வைத்ததாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாராபுரம் காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த குமரேசன் என்பவர் அளித்த தகவலின்படி, பொதுச் சுவர் பிரச்சனையை காரணமாக்கி, அப்பகுதியில் வசித்து வந்த ஆறுமுகம் என்பவரது குடும்பத்தினரை சிலர் ஊர் கூட்டம் நடத்தி சமூக ரீதியாக ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆறுமுகம் அவர்கள் இறந்த செய்தியை அறிந்து மனிதாபிமான அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்று இறுதி காரியங்களில் கலந்து கொண்ட குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தினரையும், ஊர் நாட்டாமை எனக் கூறப்படும் சிலர் கடந்த ஜனவரி 26 அன்று ஊர் கூட்டம் நடத்தி சமூக ரீதியாக ஒதுக்கி வைப்பதாக தீர்மானம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஊர் கூட்டத்தில் நாட்டாமை ஈஸ்வரன், தலைவர் கார்த்தியப்பன், ஓடும்பிள்ளை காளிரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக குமரேசன் குடும்பம் சமூக வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒருவரையோ, ஒரு குடும்பத்தையோ சமூகத்தில் இருந்து விலக்குவது சட்டவிரோதமானதும், மனித மரியாதைக்கு எதிரானதும். இதனால் எங்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு பாதுகாப்பு தேவை,” என குமரேசன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விவகாரம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையின் நடவடிக்கை மீது பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக