கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான அசம்புமலையில் உற்பத்தியாகும் உலக்கை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தற்போது நிரந்தரமாக தடை விதித்துள்ளது. இந்த வனப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்களை அதிகளவில் விட்டுச் செல்வதால் இயற்கைப் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உலக்கை அருவி வனப்பகுதிக்குள் பொது மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு அந்த இடம் முழுமையாக வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பகுதியில் தடையை மீறி யாராவது உள்ளே நுழைகிறார்களா என்பதைக் கண்காணிக்க வனத்துறையினர் ரகசிய சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விதியை மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அருவியின் மேற்பகுதி மட்டுமின்றி அதன் கீழ்ப்பகுதியில் உள்ள பாலத்திலும் குளிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களையும் வன உயிரினங்களையும் காக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக