ரேஷன் கடைகளில் மளிகை வாங்க நெருக்கடி மாதம் ரூ.1லட்சம் மதிப்பு பொருட்கள் இறக்க நிர்பந்தம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

ரேஷன் கடைகளில் மளிகை வாங்க நெருக்கடி மாதம் ரூ.1லட்சம் மதிப்பு பொருட்கள் இறக்க நிர்பந்தம்


ரேஷன் கடைகளில் கூடுதலாக மளிகை பொருட்கள் விற்க அறிவுறுத்தல் மன உளைச்சலில் விற்பனையாளர்கள், கடும் சிரமத்தில் நுகர்வோர்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர். நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்...

திருப்பூர் மாவட்ட பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்குமாறு கார்டுதாரர்களை, ரேஷன் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதற்காக மாதம், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.

திருப்பூர் மாவட்ட பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, கட்டுப்பாடற்ற பொருட்களான உப்பு, டீ துாள், சாம்பார் பொடி, சோப்பு வகைகள், மசாலா பொடிகள், பெருங்காயம், என 30க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த கட்டுப்பாடற்ற கூடுதல் மளிகை பொருட்களை வாங்கவேண்டுமென நுகர்வோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்  சில மாதங்களாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அதிகளவிலான கூடுதல் மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.  

இதன் காரணமாக சில அலுவலரின் நெருக்கடி காரணமாக ரேஷன்கடைக்கு வருகின்ற நுகர்வோர்களை கட்டாயப்படுத்தி கட்டுப்பாடற்ற கூடுதல் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரேஷன்கடைகளில் மளிகை பொருட்களை நுகர்வோர் வாங்க மறுக்கிறார்கள் என காரணம் கூறி மளிகை பொருட்களை குடோனுக்கு திருப்பி அனுப்பக்கூடாது எனவும் விற்பனையாளர்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால், மளிகை பொருட்களுக்கான மொத்த தொகையையும் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு உள்ளது. விற்பனையாகாத பொருட்களுக்கு சொந்த பணத்தை செலுத்த வேண்டிய நிலை இருப்பதால், விற்பனையாளர்கள் வேறு வழியின்றி கூடுதல் பொருட்களை வாங்க வேண்டும் என பொதுமக்களை கட்டாயப்படுத்துகின்றனர்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகை பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக கருதும் பொதுமக்கள், இதுபோன்ற மளிகை பொருட்களை வாங்க மறுக்கின்றனர்.இதனால், பல இடங்களில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதால், தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாக தெரிவித்து ரேஷன் விற்பனையாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

எனவே, திருப்பூர் மாவட்ட பகுதியிலுள்ள  

ரேஷன் கடைகளில் வலுக்கட்டாயமாக நுகர்வோர்களுக்கு மளிகைப் பொருட்களை விற்பதை முற்றிலுமாக தடைசெய்து அதிக அளவிலான மளிகை பொருட்களை இறக்கி விற்பனையாளர்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்வது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad