250 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் தாமதமான நடவடிக்கையா? – எழும் கேள்விகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 பிப்ரவரி, 2026

250 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் தாமதமான நடவடிக்கையா? – எழும் கேள்விகள்



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட அலங்கியம் காவல் நிலைய எல்லையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கடத்தி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 250 லிட்டர் அளவிலான கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


தளவாய் பட்டிணம் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள கால்வாய் சந்திப்பு பகுதி, செலம்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் கொண்டு வந்த பொருட்களில் கள்ளச்சாராயம் வைத்திருப்பது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் சொலம்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், தளவாய்ப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் சுந்தரம் (28) என்பதும் உறுதி செய்யப்பட்டது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம், தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் தொடர்ந்து பதிவாகி வரும் சூழலில், முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், போலீசாரின் நடவடிக்கை தாமதமானதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.


கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தொடர்பான கைது நடவடிக்கைகள் குறித்து செய்திகள் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தன. சில இடங்களில் குறைந்த அளவிலான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் பெருமளவில் சேமித்து விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளும் வெளிவந்துள்ளன.


இவ்வாறான பின்னணியில், அலங்கியம் காவல் நிலைய எல்லையில் 250 லிட்டர் அளவிலான கள்ளச்சாராயம் நீண்ட காலமாக விற்பனைக்காக வைத்திருந்ததாக கூறப்படுவது, கண்காணிப்பு போதுமானதாக இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது. முன்கூட்டியே தகவல்கள் கிடைத்ததா, கிடைத்திருந்தால் ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் விவாதத்திற்குரியதாகியுள்ளது.


மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம் யாருக்காக தயாரிக்கப்பட்டது, எந்த பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படவிருந்தது, இதில் வேறு நபர்கள் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad