தாராபுரத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒடிசா மாநில தொழிலாளர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தாராபுரத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒடிசா மாநில தொழிலாளர் கைது.


வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை – போலீஸ் தீவிர விசாரணை.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில், ஒடிசா மாநிலம் துடுகான் ஊரைச் சேர்ந்த பெபுத்தாதேவ் விஜய்குமார், வயது 38, என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவியுடன் தாராபுரம் பாலசுப்ரமணியம் நகர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.


இந்த நிலையில், ஆக்டிவா ஹோண்டா இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ய இருப்பதாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவலர்கள் பத்ரா, காளிதாஸ், நரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.


அப்போது பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு பேக்கரி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, டீ குடித்துக் கொண்டிருந்த விஜயகுமாரை போலீசார் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, அவரது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 25 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது.


இதனை அடுத்து, போலீசார் அவரை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்ததையும், மொத்தமாக வேறு நபர்களுக்கு மாற்றி விற்பனை செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததையும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து, விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு இந்த கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் யார் யார் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையில், பிடிபட்ட விஜயகுமாரின் அலைபேசி எண் மற்றும் தொடர்புகள் குறித்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது, கஞ்சா பயன்பாடு மனிதர்களின் உடல் நலத்தையும், மனநலத்தையும் கடுமையாக பாதிக்கும். இளம் தலைமுறையினரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் இந்த போதைப் பொருள் சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக உள்ளது. கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், அந்த தகவல்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad