திடக்கழிவு மேலாண்மை, தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வசதி, மழைநீர் வடிகால் சீரமைப்புக்கு அனுமதி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கில் இன்று நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் கு. பாப்பு கண்ணன் முன்னிலை வகித்தார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்களில் 27 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் சாக்கடை வசதி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் விநியோகம், பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை வாடகை ஒப்பந்த அடிப்படையில் ஏலம் விடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருள்கள் விவாதிக்கப்பட்டன. 30 வார்டு பகுதிகளிலும் குடிநீர் தேவைகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொத்தம் 63க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சியில் பொதுசுகாதார பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. நகர எல்லைக்குள் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து தினசரி சுமார் 19.02 மெட்ரிக் டன் குப்பைகள் உற்பத்தியாகி வருகிறது. இதில் 3.50 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் நஞ்சியம்பாளையத்தில் உள்ள வளமீட்பு மையத்தில் பேலிங் செய்து சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படுகிறது. இந்த பணிக்காக முன்பே அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.9.90 லட்சம் தொகை முடிவடையும் நிலையில் உள்ளதால், மேலும் மூன்று மாத காலத்திற்கு பழைய விகிதத்திலேயே பணி நீட்டிப்பு வழங்க ரூ.5 லட்சம் கூடுதல் செலவினத்திற்கு மன்ற அனுமதி கோரப்பட்டது. இதனை பொது நிதியில் இருந்து வழங்க மன்றம் அனுமதி வழங்கியது.
தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மேல்நிலை தொட்டி வளாகம், ஜின்னா மைதானம் மேல்நிலை தொட்டி வளாகம், தினசரி மார்கெட் மேல்நிலை தொட்டி வளாகம் ஆகிய இடங்களில் பணியாளர்கள் உணவு அருந்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பாத்திரங்களை கழுவ வசதியாக குழாய்கள் மற்றும் சிங்குகள் அமைக்க ரூ.1.20 லட்சம் செலவினத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை மன்றத்தின் பார்வைக்கும் பதிவிற்கும் வைக்கப்பட்டது. இந்த செலவினம் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் தாராபுரம் நகராட்சி வார்டு எண் 22-க்கு உட்பட்ட ஆசிரியர் காலணி பகுதியில் மழைநீர் வடிகால் மிகவும் சேதமடைந்துள்ளதாக நகர்மன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். நகர்மன்ற தலைவர் பரிந்துரையின் பேரில் நேராய்வு செய்யப்பட்டு, மழைநீர் வடிகாலை சீரமைக்க ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளவும், அதற்கான செலவினத்தை வருவாய் நிதியின் கீழ் செய்யவும் மன்றம் அனுமதி வழங்கியது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்தும் வகையில் அமையும் என நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக