திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சிஎஸ்ஐ பெண்கள் நர்சிங் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கிருஷ்ண மேகலா முன்னிலை வகித்தார்.
விழாவில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு, நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். இதில் 42 நர்சிங் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், வார்டு கவுன்சிலர் யூசுப், கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மடிக்கணினிகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் உதவி – அமைச்சர் கயல்விழி பேச்சு.
நிகழ்ச்சியின் இறுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், தாராபுரம் பகுதியில் உள்ள நான்கு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 624 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த மடிக்கணினிகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும், வேலை தேடுவதற்கும், உயர் கல்வி பயில்வதற்கும், இணைய வழி பயிற்சிகளில் பங்கேற்பதற்கும் இந்த மடிக்கணினிகள் உதவும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், கல்வி முன்னேற்றத்திற்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக