திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்

பிப்.27- தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓ.பன்னீர்செல்வத்தை பூங்கொத்து கொடுத்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.

ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் இருந்தனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பதவி வரை ஓபிஎஸ் வகித்துள்ளார். மூன்று முறை முதலமைச்சர், நிதியமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் சட்ட ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (அதிமுக இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி) இணைந்து ஓபிஎஸ் போட்டியிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவைத் தொடங்கினாலும், அதிமுகவில் மீண்டும் இணைய தயார் என்று வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார்.

ஆனால் ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் தெரிவித்துவிட்டார். 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு தலைவர் டிடிவி தினகரனின் அமமுகவை தே. ஜ. கூட்டணியில் இணைக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டாலும், ஓபிஎஸ்-ஸை சேர்க்க இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், கடந்த வாரமே சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓபிஎஸ், திமுக உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad