திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,
ஒன்றிய பாஜக அரசின் 2026–27 நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாராபுரம் எஸ்.வி.ஆர். திரையரங்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகர அவை தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் தவச்செல்வன் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டதாகவும், பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படும் அதிமுகவைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
குறிப்பாக கல்வி, 100 நாள் வேலை உறுதி திட்டம், குடிநீர் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு போதிய நிதி வழங்கப்படாததை கூட்டணி கட்சிகள் சுட்டிக்காட்டின.
திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI, CPI(M)), மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மநீம உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு வழங்கப்படாதது மாநில மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3,458 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனால் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், ஒரே சில மாநிலங்களுக்கு சாதகமாக திட்டங்களை அறிவிக்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறைக்கு எதிராக, தமிழ்நாட்டிற்கு உரிய நிதி மற்றும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், நிதி மறுப்பு நீங்கும் வரை, மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், ஆறு மணிக்கு மேல் தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முடிந்து சிறப்பு வகுப்புகளும் முடிந்து வெளியே வந்த மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவிகள் கூட்டத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்களில் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் தரையில் அமர்ந்திருந்தனர்.
மேலும், தாராபுரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு எதிர்பார்த்த அளவில் கட்சி நிர்வாகிகள் அழைக்கப்படவில்லை என பலரும் குற்றம் சாட்டினர்.
இதனால் கட்சி நிர்வாகிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக