தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன் சந்திப்பு; முஸ்லிம் சமூக கோரிக்கைகள் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன் சந்திப்பு; முஸ்லிம் சமூக கோரிக்கைகள் வலியுறுத்தல்.


சென்னை,  பிப். 06:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) மாநில பொருளாளர் இப்ராஹிம், துணை பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட குழுவினரை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, முஸ்லிம் சமூகத்திற்கான முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினர்.


இந்த சந்திப்பில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


முக்கிய கோரிக்கைகள்:

  1. முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடு உயர்வு:
    தற்போது வழங்கப்படும் 3.5% உள் இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும், அதன் பயன் எவ்வளவு அளவிற்கு சமூகத்தை சென்றடைந்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. முதல் கட்டமாக 5% ஆகவும், பின்னர் 7% ஆகவும் உயர்த்த அரசாணை வெளியிட வேண்டும் என்ற வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.

  2. வட்டியில்லா கடன் உதவி:
    கல்வி மற்றும் சிறுதொழில் வளர்ச்சிக்காக அரசு வழங்கும் அனைத்து கடன்களையும் வட்டியில்லா கடன்களாக மாற்றி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின்படி வட்டி வசூல் செய்யப்படுவதால் பலர் அரசு திட்டங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக TNTJ தெரிவித்தது.

  3. நீண்டகால சிறைவாசிகள் விடுதலை:
    20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை, ஏனைய சிறைவாசிகளைப் போல பாரபட்சமின்றி மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

  4. அரசியல் பிரதிநிதித்துவம்:
    தமிழக சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பட்டியலில் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


இந்த சந்திப்பின் போது TNTJ மாநில செயலாளர்கள் காஞ்சி சித்திக், ஐ. அன்சாரி, பெரோஸ்கான் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் இந்த கோரிக்கைகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டும் என TNTJ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad