கோவை மாவட்டம்,கிணத்துக்கடவு வட்டம், சிறுக்களந்தை பஞ்சாயத்திற்குட்பட்ட ஜக்கார்பாளையம் கிராமத்தில்( 01.03.2026)M.N.M. உயர்நிலைப் பள்ளியில் சமூக நலத்தை முன்னிறுத்தும் வகையில் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
யான் அறக்கட்டளை சார்பில், KMCH மருத்துவமனையுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அணுகக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமிற்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் வோக்ஹார்ட் அறக்கட்டளை வழங்கி, சமூகப் பொறுப்புணர்வுடன் ஆதரவு அளித்தது.
முகாமில் எலும்பியல், பல் மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலம், காது–மூக்கு–தொண்டை, பொது மருத்துவம் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு முழுமையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
ECG பரிசோதனை உள்ளிட்ட முக்கிய மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேவையானவர்களுக்கு உடனடி சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோருக்கு பரிந்துரைகளும் அளிக்கப்பட்டது.
இந்த முகாமின் மூலம் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். குறிப்பாக, மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகாமை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் மற்றும் அவரது குழுவினர் முழு அர்ப்பணிப்புடன் திட்டமிட்டு சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது. கிராம மக்களின் நல்ல வரவேற்பும், ஒத்துழைப்பும் இந்த முயற்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் M. பரமசிவம்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக