திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள முண்டுவேலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று நள்ளிரவு ஒரு மணி நேரத்திற்கு மேல் இடைவிடாது பெய்த ஆலங்கட்டி மழை, அப்பகுதி விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த திடீர் வானிலை மாற்றத்தால் முண்டு வேலாம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் விவசாயி தனது தோட்டத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். அதில் ஆலங்கட்டி மழை பெய்ததால் 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சின்ன வெங்காயம் அனைத்தும் நாசமானது இதனால் விவசாயி முத்துக்குமாருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் 20 நாட்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயம் தற்பொழுது ஆலங்கட்டி மழையால் மேலே விழுதுகள் சார்ந்து கீழே வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டது மேலும் வெங்காயத்தின் பிடிப்பு தன்மை இந்த 20 நாட்களுக்குப் பிறகுதான் கூடுதல் எடை கிடைக்கும் அந்த நேரத்தில் இதுபோன்று மழை பெய்ததால் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறோம் என தெரிவித்தார்.
மேலும் இது குறித்து முண்டு வேலாம்பட்டி பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில்
முண்டு மேளம் பட்டி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சின்ன சாம்பார் வெங்காயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன, அதோடு ஊடுபயிர்களாக இருந்த தர்பூசணி, வெண்டைக்காய், மிளகாய் போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக வெங்காய சாகுபடியில் முக்கிய இடம் வகிக்கும் தாராபுரம் பகுதி, இந்த மழையால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. முண்டுவேலம்பட்டி, கோவிந்தாபுரம், சத்திரம், பொன்னாபுரம், நரணாபுரம், மாந்தியாபுரம், பாப்பனூத்து, தாசர்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்த நிலையில் உள்ளனர்.
ஒரு ஏக்கர் வெங்காயப் பயிரிடுவதற்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், உரம், களைக்கொல்லி, தொழிலாளர் கூலி போன்ற செலவுகளால் கூடுதல் முதலீடு செய்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் முழு பயிரும் அழிந்ததால் 10-கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியபோது, “எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துவிட்டது, கடனில் சிக்கியுள்ளோம், இந்த நிலை தொடர்ந்தால் பலர் தற்கொலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது” எனக் கண்கலங்கினர். இதுபோன்ற இயற்கை பேரிடர்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் முன்பும் பயிர்கள் சேதமடைந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக ஆலங்கட்டி மழை மற்றும் திடீர் கனமழை காரணமாக வெங்காயம் போன்ற மென்மையான பயிர்கள் எளிதில் அழியும் தன்மை கொண்டவை என்பது வேளாண்மை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு உடனடி ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், வட்டி இல்லா கடன் தள்ளுபடி, மீள் சாகுபடிக்கு விதை மற்றும் உர உதவி, மற்றும் விவசாய காப்பீட்டு தொகைகளை விரைவாக வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
நஷ்டஈடு வழங்கப்படாவிட்டால், வரவிருக்கும் தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்த அரசியல் கட்சியினரையும் தங்கள் கிராமங்களுக்கு அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம், விவசாயிகளின் பாதுகாப்பிற்கான நீண்டநாள் திட்டங்கள் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக