நாகர்கோவில், மார்ச் 4:
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்ப்பதாக தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையம்
கன்னியாகுமரி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக உள்ளது. கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், மற்றொரு பாறையில் அமைந்துள்ள திருவள்ளுவர் 133 அடி உயர சிலை, இவற்றை இணைக்கும் கண்ணாடி பாலம், மேலும் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலா தலங்கள் மாவட்டத்தின் சிறப்பாக உள்ளன என்று அவர் கூறினார்.
அடிப்படை வசதிகள் மேம்படுத்த உத்தரவு
சுற்றுலா பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை, பேருந்து வசதி, குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தவும், “குப்பையில்லா கன்னியாகுமரி” உருவாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
வளர்ச்சி பணிகள் விரைவில் முடிக்க வேண்டும். மாத்தூர், திற்பரப்பு, சிற்றாறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆன்லைன் டிக்கெட் வசதி அறிமுகம்
கண்ணாடி பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நுழைவுச்சீட்டு பெற நீண்ட வரிசை நிலவி வந்தது. இதனை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு வழங்கும் முறை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கான பணத்தை உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதிகாரிகள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல்குமார், இ.ஆ.ப., மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பூபதி, கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளர் கண்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக