தாராபுரத்தில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, விலை உயர்வு குறித்து மத்திய அரசை விமர்சித்த அமைச்சர்!.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

தாராபுரத்தில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, விலை உயர்வு குறித்து மத்திய அரசை விமர்சித்த அமைச்சர்!..


திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:

கிழக்கு மாவட்டம்   நகர (திமுக) சார்பில்,புது காவல் நிலைய வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், பவர் சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, காலி கேஸ் சிலிண்டர்கள் மற்றும் விறகு கட்டைகளை ஆர்ப்பாட்ட இடத்தில் வைத்து போராட்டம் நடத்தினர். பெண்கள் சிலர் விறகு கட்டைகளை தலையில் சுமந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்கவில்லை என்றும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகிறார்கள் என்று அவர் கூறினார். மத்திய மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கொள்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


மேலும், சர்வதேச அரசியல் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், இந்தியா வெளிநாட்டு நாடுகளின் அழுத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் தொடர்பான சில விவகாரங்களில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார். இந்தியாவின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களின் பிரச்சினைகளை மத்திய அரசு உடனடியாக தீர்க்க வேண்டும், எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தமிழகத்திற்கு உரிய திட்டங்களையும் நிதியையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டம் நடைபெற்றது. தாராபுரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad