வாக்கு எண்ணிக்கைக்கான மேற்பார்வையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்கு எண்ணிக்கைக்கான மேற்பார்வையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி (Training) வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று (29.04.2026) நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
விஷு மகாஜன் தெரிவித்ததாவது :
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026க்கான வாக்கு எண்ணிக்கையானது வருகின்ற 04-05-2026 அன்று நடைபெற உள்ளது. இவ்வாக்கு எண்ணிக்கையில், வாக்கு எண்ணிக்கைக்கான மேற்பார்வையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்களை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட சுழற்சி முறையானது 28.04.2026 அன்று மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் 24 தபால் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 48 தபால் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 138 நுண் பார்வையாளர்கள் மற்றும் 18 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என மொத்தம் 330 பேருக்கு இன்று வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், வாக்கு எண்ணிக்கை குறித்த விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின்பு, 2ம் கட்ட பயிற்சியானது, தேர்தல் பொது பார்வையாளர்கள் தலைமையில் நடைபெறும். மேலும், 3ம் கட்டமாக சுழற்சி முறையில் அலுவலர்களுக்கு, வாக்கு எண்ணிக்கை (04.05.2026) அன்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து காலை 5.00 மணியளவில் பொது தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் சட்டமன்றத் தொகுதியின் மேஜைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.
இப்பயிற்சி வகுப்பில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைகள்) சிவசுப்பிரமணியன், இணை இயக்குநர் / பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் ஸ்வர்ணலதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (வருவாய் பிரிவு) ரகு, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக