தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள பேய்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தில் வைத்து, ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடகால் பாசன விவசாயம் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது.
தற்போது நெற்பயிர்கள் மற்றும் வாழைப் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. நெற்பயிர்கள் மற்றும் வாழைப்பயிர்கள் பருவத்தை எட்டி வரும் நிலையில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன் கடன்களை கட்ட முடியாத சூழ்நிலையும் உருவாகி விடும். பலமுறை நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் தண்ணீர் திறந்து விடவில்லை.
அதனால் 2 தினங்களுக்குள் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்க செயலாளர் ஜெய பொன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
எங்களுக்கு பிசான சாகுபடிக்கு தண்ணீர் நவம்பர் மாதம்தான் திறந்து விட்டார்கள் தண்ணீர் தாமதமாக திறந்து விட்டதால் நாங்கள் விவசாயத்தை தாமதமாகவே ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விதை கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் தாமதமாகவே பயிரிட்டனர்.
தற்போது நெற்பயிரில் கதிர் வர ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது நீர் வரத்தை நிறுத்தி விட்டார்கள். மேலும் இந்த காலங்களில் மழையும் பெய்யவில்லை. இதனால் அதிகாரிகளிடம் நாங்கள் மீண்டும் மீண்டும் முறையிட்டு பார்த்தோம். ஆனால் அவர்கள் தண்ணீர் இதுவரை திறந்துவிடவில்லை.
தற்போது குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. நெற்பயிர்களும் காய்ந்து வருகிறது. எங்களுக்கு பலன் கிடைக்கும் நேரத்தில் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3000 ஏக்கரில் நெற்பயிர்கள் மற்றும் வாழை பயிரிடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் குறைந்தது 10 தினங்களாவது தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். எங்களின் வாழ்வாதாரமும் தப்பிக்கும். நாங்கள் வாங்கிய கடன்களை திருப்பி கட்ட முடியாமல் திணறி வருகிறோம்.
இரண்டு தினங்களுக்குள் தண்ணீர் வரவில்லை என்றால் விவசாய சங்கங்கள் அனைத்தும் முதல் கட்டமாக தேர்தலை புறக்கணிப்பு செய்ய உள்ளோம். மேலும் ஆர்ப்பாட்டமும் செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக