தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டை கே டி சி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டு 2026 தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை வழங்கி பேசினார் . பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
மதவெறியின் அடிப்படையில் ஆட்சியை அமைக்கத் துடிக்கும் பாசிச பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வை தவ்ஹீத் ஜமாத், மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தபோது, அவர் மௌனம் காத்தார். இதன் காரணமாக, எதிர்காலத்தில் அவர் பாஜகவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக இஸ்லாமியச் சிறுபான்மை மக்கள் கருதுகின்றனர். எனவே, அவர் விஷயத்தில் மக்கள் கவனமாக உள்ளனர்.
ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவைத் தவ்ஹீத் ஜமாத் வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்தின் எம்பி தொகுதிகள் குறைக்கப்படலாம், பாஜக வலுவாக உள்ள உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் சதி.
ஏற்கனவே இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துகளைக் குறிவைக்கும் சட்டங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு, தற்போது கிறிஸ்தவ மக்களின் சொத்துகளையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியையும் முடக்கும் வகையில் FCRA சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
இது சிறுபான்மையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ஆணையத்தின் முத்திரைக்குப் பதிலாக பாஜகவின் 'தாமரை' சின்னம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
தேர்தல் ஆணையம் பாஜக அரசுடன் கைகோர்த்துச் செயல்படுவதையே இது காட்டுகிறது. ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தமிழகத்தில் இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு ஆதரவாகப் பேசும் பர்தா அணிந்த பெண்கள், வெறும் தீவிர ரசிகைகளே தவிர, அவர்கள் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமுதாயத்தின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை. இஸ்லாமியச் சமூகம் பாசிச சக்திகளுக்கு எதிராகத் தெளிவாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக