திருச்சி, ஜூன் 5:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் குமுளூர் வேளாண் கல்வி நிறுவனத்தில் 10-வது ஆண்டு விளையாட்டு விழா கடந்த 27.05.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு வேளாண் பட்டயப் படிப்பு மற்றும் நான்கு ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விளையாட்டு விழா, இந்த ஆண்டும் உற்சாகமாக நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பனாவத் அரவிந்த், ஐ.பி.எஸ்., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, கல்வி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் மு. அசோகன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே. சரவணகுமார் நன்றியுரை வழங்கினார். விழாவில் மாணவர்கள் பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா என நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில் பச்சை அணி அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மஞ்சள் அணி இரண்டாமிடத்தையும் பெற்றது.
முதலிடம் பெற்ற பச்சை அணிக்கு சிறப்பு விருந்தினர் திரு. பனாவத் அரவிந்த், ஐ.பி.எஸ்., சுழற்கோப்பையை வழங்கி பாராட்டினார். தனிநபர் பிரிவில், மாணவர்களுக்கான போட்டிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர் முனியப்பன் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவியர் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவி அபிநயா முதலிடம் பெற்று சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். இருவருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பனாவத் அரவிந்த், மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கி வருவது பாராட்டத்தக்கது என்றும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
மேலும், கல்வி நிறுவனத்தின் விளையாட்டு மைதானம் நவீன மின்ஒலி வசதிகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அளவிலான போட்டிகளை நடத்த ஏற்றதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். விழாவின் நிறைவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் கல்வி பயிற்றுநர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக