கோயில் குளங்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்; சுற்றுலா துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் – அமீரக தமிழ் சங்கத் தலைவி டாக்டர் ஷீலு கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூன், 2026

கோயில் குளங்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்; சுற்றுலா துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் – அமீரக தமிழ் சங்கத் தலைவி டாக்டர் ஷீலு கோரிக்கை.


பட்டுக்கோட்டை, ஜூன் 02:


தமிழகத்தில் உள்ள கோயில் குளங்களை தூர்வாரி சுத்தம் செய்யவும், சுற்றுலா துறையை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி டாக்டர் ஷீலு வலியுறுத்தியுள்ளார்.


தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை முன்னிட்டு துபாயில் செயல்பட்டு வரும் அமீரக தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி டாக்டர் ஷீலு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள பல கோயில் குளங்கள் பக்தர்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பராமரிப்பின்றி காணப்படுகின்றன. எனவே, அவற்றை தூர்வாரி சுத்தம் செய்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அதேபோல், தமிழகம் இயற்கை வளங்கள், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் ஆன்மிக தலங்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலா துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.


மேலும், அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால், அமீரக தமிழ் சங்கம் பாரபட்சமின்றி அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. தமிழக அரசின் அங்கீகாரம் அமீரக தமிழ் சங்கத்திற்கு கிடைத்தால், தமிழக மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும்.


இதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார். அமீரக தமிழ் சங்கம் தொடர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் டாக்டர் ஷீலு தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad