உளுந்தூர்பேட்டை, ஆகஸ்ட் 26:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா – 2026 வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. ஜே.எஸ்.ஏ. கல்விக் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவை கல்விக் குழுமத் தலைவர் முனைவர் கே. ஜெயராமன், செயலாளர் முனைவர் JSA அருண், பொருளாளர் ஜெ. சாந்தி ஜெயராமன், நிர்வாக இயக்குநர் முனைவர் கண்மணி அருண் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் ஆர். கலைவாணி தலைமை வகித்தார். துணை முதல்வர் கே. கர்ணன் முன்னிலை வகித்தார்.
கேரள பாரம்பரியத்தில் அசத்திய மாணவிகள்
ஓணம் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகம் முழுவதும் கேரள பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கல்லூரியின் அனைத்து துறைகளையும் சேர்ந்த மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, கேரள பாரம்பரிய முறையில் அழகிய பூக்களம் அமைத்து தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர்.
மேலும், பாரம்பரிய சண்ட மேளம் முழங்க, மாணவிகள் உற்சாகமாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். கேரளத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழாவில் பங்கேற்ற அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. மாணவிகளிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் உற்சாகமான சூழலை ஏற்படுத்தியது.
விழாவில் கல்லூரியின் அனைத்து துறை ஆசிரியர்கள், 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு ஓணம் திருவிழாவை சிறப்பித்தனர். அனைவரின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் நடைபெற்ற ஓணம் விழா – 2026 சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது. மாணவிகளுக்கு கேரள பாரம்பரிய கலாச்சாரத்தையும், ஓணம் பண்டிகையின் சிறப்பையும் நேரடியாக உணர்த்திய இந்நிகழ்வு, அவர்களுக்கு மறக்க முடியாத இனிய நினைவுகளை ஏற்படுத்தியதுடன், கல்லூரியின் குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகவும் அமைந்தது.
.jpeg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக