15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நிலவி வரும் தொடர் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் அன்றாட தேவைகளுக்குக்கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையும், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்தந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர்களிடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் அதிருப்தியடைந்த திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வலியுறுத்தி நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை உடனடியாக சரிசெய்து, அனைத்து வார்டுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

குடிநீர் போன்ற அத்தியாவசிய பிரச்சினையில் கட்சி பேதமின்றி அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad