கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து, சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று கத்தியால் குத்தி, 4 பவுன் தங்கச் செயின் மற்றும் செல்போனை பறித்ததுடன், GPay மூலம் ரூ.28 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், முடப்புள்ளி பகுதியைச் சேர்ந்த வசந்தவேல் (25), உளுந்தூர்பேட்டையில் தனது வேலையை முடித்துவிட்டு நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நைனாகுப்பம் – மதியனூர் கிராமங்களுக்கு இடையே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், வசந்தவேலின் இருசக்கர வாகனத்தை வழிமறித்ததாக கூறப்படுகிறது. அவரது வாகனத்தின் சாவியைப் பிடுங்கிய அந்த கும்பல், கத்தியை காட்டி மிரட்டி அவரை அருகிலிருந்த சவுக்கு தோப்புக்குள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
அங்கு வசந்தவேலை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள், கத்தியால் அவரது தலை மற்றும் காலில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வசந்தவேலிடம் இருந்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்ததுடன், செல்போனையும் பறித்துள்ளனர். பின்னர் அவரது செல்போன் மூலம் GPay பயன்படுத்தி ரூ.28 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், படுகாயங்களுடன் கிடந்த வசந்தவேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடியதாக கூறப்படும் 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வழிப்பறி கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக