தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் நிலவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட மணிக்கூண்டு பகுதியிலும், நகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் வருகை புரிந்து, அதிகாரிகள் முன்னிலையில் பணிகள் மற்றும் நிலைமைகளை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், அதனை அகற்றவும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மழைநீர் நீண்ட நாட்களாக தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றி, கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், உளுந்தூர்பேட்டை பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் அதிகளவில் தேங்கி சாலையில் வெளியேறி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் பள்ளி, வங்கி, எல்.ஐ.சி. அலுவலகம் மற்றும் சிலிண்டர் விநியோக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவ்வழியாக சென்று வருகின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, மணிக்கூண்டு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரை உடனடியாக சரிசெய்தல் மற்றும் அப்பகுதியில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உளுந்தூர்பேட்டை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பொதுமக்களின் புகார்களுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக