தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்திலும் நேற்று திடீர் சோதனை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையை தொடங்கினர்.
சோதனையையொட்டி நகராட்சி அலுவலகத்தின் பிரதான கதவுகள் மூடப்பட்டன. வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழையாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் நேரில் சென்று அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மேஜைகள், அலமாரிகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள், வங்கி கணக்கு விவரங்கள், கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, கணக்கில் வராததாகக் கூறப்படும் சுமார் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மதியம் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் தீவிர சோதனை பல மணி நேரம் நீடித்து நள்ளிரவு வரை நடைபெற்றது. சுமார் நள்ளிரவு 12.20 மணியளவில் சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றனர்.
அதன் பின்னர் நகராட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் ஒவ்வொருவராக அவசர அவசரமாக வெளியேறிச் சென்றனர்.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், ஆன்லைன் மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.7.70 லட்சம் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக நகராட்சி பொறியாளர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், வழக்கின் முழுமையான விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முழுமையாக வெளியிடப்படவில்லை.
நள்ளிரவு வரை நீடித்த இந்த அதிரடி சோதனை காரணமாக உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக