நெல்லை: சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழகத்தின் நிர்வாகத்திற்கும் முக்கிய பங்காற்றிய காங்கிரஸ் தலைவர்களின் தியாகங்களையும் சேவைகளையும் கவுரவிக்கும் வகையில், பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நல்லாசிரியர் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் கக்கன் உள்ளிட்ட தலைவர்களின் சேவைகள் என்றும் நினைவு கூரத்தக்கவை என்றார்.
பக்தவச்சலம் பெயரில் திருவுருவப் படம்:
1963-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராகப் பணியாற்றிய பக்தவச்சலத்தின் திருவுருவப் படத்தை தமிழக சட்டமன்றத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாகவும், இதுதொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆர்.வெங்கட்ராமன் பெயரில் தொழிற்பேட்டை:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் தொழிற்பேட்டைகள், ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உருவாக காரணமாக இருந்த ஆர்.வெங்கட்ராமனின் சேவையைப் போற்றும் வகையில், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சி.சுப்பிரமணியம் பெயரில் வேளாண்மைப் பல்கலைக்கழகம்
நாட்டில் பசுமைப் புரட்சிக்கு முக்கிய பங்காற்றி, உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வழிவகுத்த பாரத ரத்னா சி.சுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில், கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
கக்கன் பெயரில் காவல் பயிற்சி முகாம்
எளிமை மற்றும் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி கக்கனின் தியாகத்தை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஆவடியில் உள்ள காவல் சிறப்பு பயிற்சி முகாமிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளதாகவும், கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் நல்லாசிரியர் செல்லப்பா தெரிவித்தார்.
செய்தியாளர் நெல்லை மாடசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக