தொடர் விடுமுறையால் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 செப்டம்பர், 2026

தொடர் விடுமுறையால் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.


ஜிஎஸ்டி சாலையில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுப்பு ஊர்ந்து செல்லும் வாகனங்களால் பயணிகள் அவதி.

தமிழகத்தில் சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை–திருச்சி ஜிஎஸ்டி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இன்று வாகனப் போக்குவரத்து அதிகரித்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி ஏராளமான பொதுமக்கள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்தது. சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்காக காத்திருந்த வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்றன.

இதனால் சென்னை திருச்சி ஜிஎஸ்டி சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. சுங்கச்சாவடியை நோக்கி வரும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

வாகன நெரிசலை குறைக்கும் வகையில் செங்குறிச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுங்கச்சாவடியின் எதிர்திசையில் உள்ள இரண்டு வழித்தடங்கள் தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதையடுத்து அந்த வழித்தடங்கள் வழியாக கார், வேன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்ததால் சுங்கச்சாவடி பகுதியில் நெரிசல் நீடித்தது.

தொடர் விடுமுறை காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அதிகளவில் வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருவதால், முக்கிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.

செங்குறிச்சி சுங்கச்சாவடியை கடக்க நீண்ட நேரம் ஆனதால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதியடைந்தனர். குறிப்பாக குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் பேருந்து பயணிகள் சுங்கச்சாவடி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை–திருச்சி ஜிஎஸ்டி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடி பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிகரித்துள்ளதால், வரும் நாட்களிலும் செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், வாகன ஓட்டிகள் பொறுமையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad