கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் பகுதியில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சிகரம் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊடகவியலாளர்கள் ஆதி சுரேஷ், சசிகுமார், நந்தகோபாலகிருஷ்ணன் மற்றும் சாணக்யா காவலர் பயிற்சி இயக்குநர் பாலுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் ஆனந்தன் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளது என்றார். குறிப்பாக கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்க்கும் எனக் குறிப்பிட்டார்.
பெண்கள் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அவசர காலங்களில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறனை பெற முடியும் என்றும், அச்சமின்றி சமூகத்தில் சுதந்திரமாக செயல்படுவதற்கு இது உதவும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் தங்களது பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு, எதிர்காலத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.
விழாவில் சிகரம் அறக்கட்டளை இயக்குநர், கராத்தே பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், அறக்கட்டளை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக