டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் லாரி சாலையில் கவிழ்ந்தது வாழைத்தார்கள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு ஓட்டுநர் லேசான காயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2026

டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் லாரி சாலையில் கவிழ்ந்தது வாழைத்தார்கள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு ஓட்டுநர் லேசான காயம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் வாழைத்தார் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியின் டயர் திடீரென வெடித்ததில், லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட வாழைத்தார்கள் சாலையில் கொட்டி சிதறியதால், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (27) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில், எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்பக்க இடதுபுற டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட வாழைத்தார்கள் சாலையில் கொட்டி சிதறின. வாழைத்தார்கள் சேதமடைந்ததுடன், விபத்தில் லாரியின் ஓட்டுநர் ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையில் சிதறிக் கிடந்த வாழைத்தார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், விபத்துக்குள்ளான ஈச்சர் லாரியை சாலையில் இருந்து மீட்கும் பணியும் நடைபெற்றது. இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad