கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டு, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் ஏற்பாடுகளை அமைச்சர் வன்னி அரசு நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் கல்வி, பள்ளி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, பள்ளி மாணவர்களுடன் ஒரே வரிசையில் அமர்ந்து அமைச்சர் வன்னி அரசு காலை உணவு அருந்தினார். மாணவர்களுடன் இணைந்து உணவருந்திய அமைச்சர், அவர்களுடன் அன்புடன் உரையாடி மகிழ்ந்தார்.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவும் கலந்து கொண்டு, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். இதனால் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் உற்சாகமான சூழல் நிலவியது.
காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சீராக வருவதுடன், அவர்களின் உடல் நலம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துவதற்கும் உதவியாக இருப்பதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வித்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டதையடுத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக