நெல்லை, அக்.6- திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி மற்றும் ஜெசூயிட் மதுரை மாகாண சுற்றுச்சூழல் ஆணையம் சார்பில், “காலநிலை நீதி நடைபயணம் – 2026” என்ற விழிப்புணர்வு நடைபயணம் இன்று காலை நடைபெற்றது.
“நமது பொதுவான இல்லத்திற்காக ஒன்றிணைந்து நடப்போம்” என்ற கருத்தை முன்வைத்து நடைபெற்ற இந்த நடைபயணத்தின் மூலம், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எதிர்கால தலைமுறைக்கான இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
படைப்பின் காலம் எனப்படும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதத்தின் நிறைவு நிகழ்வாக இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி காலை 10 மணி வரை நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக சிறப்பு இறைவேண்டல் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற நடைபயணத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஐ.ஏ.எஸ். மற்றும் திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ். ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த காலநிலை விழிப்புணர்வு நடைபயணத்தில், புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஜெசூயிட் சமூகத்தினர், சுற்றுச்சூழல் அமைப்புகள், பசுமைக் குழுக்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கமாக, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, இயற்கை வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் வருங்கால தலைமுறைக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச் செல்வது ஆகியவை வலியுறுத்தப்பட்டன.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனிநபர் ஒருவரின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
புனித சவேரியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை டாக்டர் காட்வின் ரூபஸ் எஸ்.ஜே., ஜெசூயிட் மதுரை மாகாண சுற்றுச்சூழல் ஆணைய ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை அந்தோணி சாமி எஸ்.ஜே. உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
“ஒவ்வொரு அடியும் முக்கியம்... ஒவ்வொரு குரலும் முக்கியம்... ஒவ்வொரு செயல்பாடும் முக்கியம்” என்ற கருத்தை முன்வைத்து நடைபெற்ற இந்த காலநிலை நடைபயணம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக