தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி, மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடி முழுவதும் பெண் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றும் சிறப்பு வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 15 பறக்கும் படைகள், 3 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தலை முன்னிட்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதிக்குட்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் அதிகாரிகள் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக