கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தில் தொடர் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக் குடங்களுடன் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நைனாகுப்பம் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முழுவதும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த தொட்டியில் பறவைகள் மற்றும் குரங்குகள் இறந்து கிடப்பதாகவும், கட்டிய நாள் முதல் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அதனை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தொடர் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத செங்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நைனாகுப்பம் பேருந்து நிறுத்தம் பகுதியில் காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனை குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.
அப்போது, இடியும் நிலையில் உள்ள 40 ஆண்டு பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக