பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி!
நுகர்வோர் உரிமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!
பந்தலூர்: பந்தலூர் டியூஸ் மேல்நிலைப் பள்ளியில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளை சேர்ந்த பள்ளிகளில் செயல்பட்டு வரும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (CCHEP) சார்பில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இப்பயிற்சி முகாமிற்கு
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். டியூஸ் மேல்நிலை பள்ளி முதல்வர் சுதந்திரநாத், பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் சக்கீர், நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் மகேந்திர பூபதி, ஏசுதாஸ், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், நுகர்வோர் மைய நிர்வாகியுமான எபினேசர் வரவேற்றார்.
பயிற்சி முகாமை கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் தொடங்கி வைத்துப் பேசுகையில்,
"நுகர்வோர் கல்வி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில் பள்ளிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆசிரியர்கள் நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காலாவதியான உணவுப் பொருட்கள், தரமற்ற பொருட்கள், போலி விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது" என்றார்.
தொடர்ந்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சரவணன் பேசுகையில்,
"ஒவ்வொரு நுகர்வோரும் தங்களுக்கான சட்டப்பூர்வ உரிமைகளைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நுகர்வோர் பாதுகாப்பு, பொருட்களைத் தேர்வு செய்தல், உரிய தகவல்களைப் பெறுதல், நுகர்வோர் கல்வி பெறுதல், குறைகளைச் சுட்டிக்காட்டுதல் மற்றும் குறைகளுக்குத் தீர்வு பெறுதல் உள்ளிட்ட உரிமைகளைச் சட்டம் வழங்கியுள்ளது. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி நுகர்வோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை அமலில் உள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கைவிட்டு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும்" என்றார்.
மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் பேசுகையில்,
"மின்சார உற்பத்திக்கான செலவினங்கள் அதிகரித்து வருவதுடன், மரபுசார் எரிசக்தி வளங்களின் பற்றாக்குறை மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற சவால்களும் அதிகரித்து வருகின்றன. எதிர்கால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய சூரிய ஒளி மின்சாரப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத் திட்டங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தி வீடுகளில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முன்வர வேண்டும்" என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசுகையில்,
"தடுப்பூசிகள் மூலம் பல்வேறு தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி 14 வயது பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது. தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் செலுத்த வேண்டிய இந்தத் தடுப்பூசி தற்போது அரசின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நம்பாமல், தகுதியான மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவது, மாணவர்களிடையே நுகர்வோர் கல்வியை விரிவுபடுத்துவது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பார்த்தசாரதி பங்கேற்று, பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளைச் சேர்ந்த மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் தமிழரசன், கார்த்திக், ஹரி, கார்த்திகேசு, தர்வேஷ், ஹசீனா, பள்ளிகளின் குடிமக்கள் நுகர்வோர் மன்றப் பொறுப்பாசிரியர்கள், நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக