ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆரம்பம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆரம்பம்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது. நிகழாண்டு(2023) ஆடி மாதத்தில் அமாவாசை 2 நாள்கள் (ஜூலை 17, ஆகஸ்ட் 16) இருக்கும் நிலையில், இக்கோயிலில் ஆடி அமாவசை திருவிழா ஆகஸ்ட் 7 தொடங்கி 18 ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது.


ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றம், இரவு 8 மணிக்கு கேடயச் சப்பரத்தில் சுவாமி கோயிலில் வலம் வருதல் நடைபெறும். 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நாள்தோறும் காலை பல்வேறு அலங்காரங்களில் சோ்ம விநாயகா் உலா நடைபெறும்.


முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 16 இல் நடைபெறுகிறது. பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, பின்னா் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்மத் திருக்கோல பவனி, இரவு 11 மணிக்கு ஒன்றாம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறும்.


ஆக. 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், நண்பகல் 1 மணிக்கு 2ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி, இரவு 10.30-க்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தக் காட்சி, திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறும்.


12ஆம் நாளான ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 8 மணிக்கு தீா்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறும்.ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.


ஏரல் சேர்மன் ஸ்ரீ அருணாச்சல சுவாமி தல புராணம். ஏரலில் ராமசாமி நாடாருக்கும் சிவனணைந்தம்மாளுக்கும் விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள் உத்திர நட்சத்திரத்தில் அதாவது 02.10.1880 அன்று அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர்.  உடனே ராமசாமி நாடார் வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் செட்டியாபத்து கோயிலில் அழகிய மண்டபம் கட்டினார். அருணாசலம், மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார். ஏரல், சிறுத்தொண்டநல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தது. அருணாசலம், பண்ணைவிளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு அவர் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். 


வாலிபப் பருவம் அவரை நெருங்க, அவர் தனது எண்ணத்தை இறை தேடலில் செலுத்தி வந்தார். தனது வழி முன்னோடிகள் செய்து வந்த விஷக்கடி மருத்துவத்தினையும் இவர் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் பேராதரவு இருந்தது. இதற்கிடையில் இவரது அறிவாற்றலையும், ஆங்கிலப் புலமையையும் கண்ட அன்றைய ஆங்கில அரசு இவரை சிறுதொண்ட நல்லூருக்கு முன்சீப்பாக (நிர்வாக அதிகாரி) நியமித்தார்கள்.


அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருணாசலம், அதைச் சிறப்பாக செய்து வந்தார். சிறுவயதாக இருந்தாலும் வரி வசூல் செய்வது. அந்தக் கிராமத்தில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளை பஞ்சாயத்து பேசி முடிப்பது என்று 8 ஆண்டுகளாக இப்பணியை மிகச்சிறப்பாக செய்து வந்தார். இதற்கிடையில் ஒரு நாள் செய்த வசூலை உண்மை நிலவரமாக சொல்லாமல், குறைத்து மாவட்ட அதிகாரிக்கு சொல்லுமாறு, மேலதிகாரியான வருவாய்த்துறை அதிகாரி இவரிடம் கூற, பொய் சொல்ல வேண்டுமா என்று நினைத்த இவர் மறு நிமிடமே தான் வகித்து வந்த பதவியை துறந்து விட்டார். அந்தப் பதவியை விட்ட உடனே ஆன்மிகத்தில் தனது ஈடுபாட்டை அதிகமாக்கினார். சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும், தங்களது குடும்ப சொத்துகளை பார்வையிட அருணாசலம் வெள்ளை வேட்டியும், கோட்டும் அணிந்து தலைப்பாகையுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி செல்வார். அவருடைய ராஜ தோரணையை கண்டு உறவினர்களும், ஊராரும் வியந்து நிற்பர்.


இதற்கிடையில் அருணாசலத்துக்கு திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதையறிந்த அவர் 28 வயது ஆகட்டும். அப்போது பார்த்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அப்பழுக்கற்ற மனிதராய், பிரம்மச்சாரியாக வாழ்ந்த இந்த மகானை கவனித்துக் கொண்டே வந்த, அப்போதைய மாவட்ட கலெக்டர்கள் பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன் ஆகியோர் பரிந்துரைப்படி ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக (தலைவராக) அருணாசலத்தினை நியமித்தார்கள். அந்தக் காலங்களில் ஊராட்சி, பேரூராட்சி தலைவர்களைகூட சேர்மன் என்று அழைப்பது வழக்கம். சேர்மனான அருணாசலம், ஏரலில் பள்ளிக் கூடங்களைத் தொடங்கினார். தெரு விளக்குகளை அமைத்தார். 


அந்த விளக்குகள் தற்போது போல அல்லாமல் எண்ணெயால் எரியும் தீப விளக்குகள். இந்த விளக்குகள் இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க பணியாளர்களை நியமனம் செய்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து கொடுத்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார். அனைத்து மக்களிடமும் அன்போடு பழகி வந்தார்.  


அதிகம் பேசாமல் அமைதியுடன் திகழ்ந்த அருணாசலம், தனது ஆன்மிக சக்தியால், பின் நடப்பதை முன் அறியும் திறன் பெற்றார். ஒரு நாள் அப்பகுதியைச் சேர்ந்த  பால்நாடார் என்பவரைப் பாம்பு கடித்து விட்டது. அப்போது அவரைக் கடித்த பாம்பையே திரும்ப வரவழைத்து அந்த விஷத்தினை உறிஞ்சச் செய்தார். இதைக்கண்ட அனைவரும் மெய் சிலிர்த்தனர். அவருக்குள் ஏதே ஒரு தெய்வ சக்தி இருப்பதை அந்த ஊர்காரர்களும், உறவினர்களும் உணர்ந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரை சேர்மன் சாமி என்றே அழைக்கத் தொடங்கினர். ஒரு சமயம் அவரது தங்கை ஒருவர் புளியங்காடு என்ற ஊரில் வசித்து வந்தார்.


அவர், சேர்மனிடம் ''அண்ணே, என் வீட்டுக்கு வரமாட்டீங்களா'' என்று கேட்டதற்கு, அவர் தனது போட்டோ ஒன்றைக் கொடுத்து இதை வைத்து என்னை பார்த்துக் கொள் என்று கூறினார். அவர் போட்டோவை வாங்கிக்கொண்டு சென்ற சில நாளில் போட்டோ வைக்கப்பட்டிருந்த அந்த அறை திடீரென்று தீ பிடித்து எரிந்தது. அப்போது அறை முழுவதும் எரிந்து சாம்பலானது ஆனால் சேர்மன் சுவாமியின் படம் மட்டும் நெருப்பில் எரியவில்லை இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


ஒரு நாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி  கருத்தபாண்டியை அழைத்து, காலம் கனிந்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது. வருகிற அமாவாசை அன்று ஆடிமாதம் 13ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) அன்று உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன். என்னுடைய உடலை விட்டு ஜீவன் போனாலும் நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து வருவேன். அவர்களை காலம் காலமாக காத்து வருவேன். 


என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்குச் செய்யும் சடங்குகளை செய்து அப்படியே இருந்த நிலையில் குழி தோண்டி வையுங்கள். அப்போது வானத்தில் கருடன் ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல் மீது படும். அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடி விடுங்கள். செய்ய வேண்டிய சடங்குகளை செய்யுங்கள் என்று முக மலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.


சுவாமிகள் வாக்கினைக் கேட்ட கருத்தபாண்டி நாடார் கலங்கி கண்ணீர் வடித்தார். தன்னுடைய இறுதிக் காலம் இதுதான் என முடிவு எடுத்த சேர்மன் சுவாமிகள் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றார். அங்குள்ள கோப்புகள் அனைத்தினையும் பார்த்து முறையாக கையொப்பம் வைத்தார். 28. 07. 1908. அவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு ஒன்று கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி இதோ வருகிறேன் என்று கூடியிருந்த அனைவரையும் பார்த்து புன்னகை சிந்தும் பொன் முகத்தோடு கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது. (பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டது. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது.


சுவாமிகள் படித்த நூல்கள், பயன் படுத்திய விலை மதிப்பு மிக்க பொருள்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமி அமர வைக்கப்பட்டிருந்த குழியை மலர்களாலும், மண்ணாலும் நிரப்பினார்கள். சுவாமி தெய்வ நிலையடைந்த ஒரு சில நாளில் அவர்களோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றனர். அப்போது, பாம்புகள் கூட்டம் படையெடுத்து வந்தது. அவர்களை படமெடுத்து விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர். இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார். 



அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார். உடனே இனி தனது தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார். எப்போதுமே ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் மீது சுவாமிக்கு அலாதி பிரியம் உண்டு. சுவாமி சமாதி நிலை அடைந்தாலும் அந்தப் பிரியம் அவரை விட்டுப் போகவில்லை. ஆகவே அந்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்தார். சுவாமிகள் உயிரோடு இருந்த போது அவரிடம் நோய் தீர்க்க மருந்து வாங்கி உண்டவர் ஆதி திராவிடப்பெண்ணான சுடலைப் பேச்சி. அவர் தனக்கு நோய் தீரவில்லையே என்று சுவாமி சமாதிக்கு வந்து வேண்டி நின்றாள். நோயின் ரணம் தாங்காமல் அங்கேயே அழுதாள். உடனே அந்தப் பெண்ணுக்கு காட்சி கொடுத்த சுவாமி தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும் என்று கூறினார். 


அதன்படி அவரது நோய் தீர்ந்தது. சேர்மன் சுவாமிகளின் அருளாற்றலின் தனிச்சிறப்பு மற்ற மாநிலங்களிலும் பரவியது. அப்பகுதியைச் சேர்ந்த மரியாள் என்ற சிறுமி  பூப்படையவில்லை. அவளது பெற்றோர்கள் பல மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்தும் பலன் அளிக்கவில்லை. அந்த பெண்ணின் பெற்றோர் தெரிந்தவர்கள் மூலம் அறியப் பெற்று சேர்மன் சுவாமியின் கோயிலுக்கு மகளை அழைத்து வந்தனர். கோயிலுக்கு வந்த, அவர்கள் வீடு செல்வதற்கு முன்பு ஆற்றின் மறு கரையில் வைத்தே அவள் பூப்பெய்தினாள். அவர்கள் குடும்பம் ஆண்டாண்டுகளாக இங்கு வந்து வணங்கி செல்கின்றனர். கிறிஸ்வர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர். 


ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர்களாக இருந்தவர்கள் மெக்வர், டேவிட்சன் ஆகியோர் ஆவர். அவர்கள் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர் வில்லியத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர். கோயிலுக்கு வரும் முன்பு அவர்கள் வந்த குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன. ஆகவே அவர்கள் குதிரையை விட்டு இறங்கி சுவாமியின் கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார். 


அந்தக் காட்சியை பார்த்த அவர்கள் வியர்வை சொட்ட சொட்ட அந்த இடத்தில் காலணிகளை கழற்றி விட்டு தனது தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர். நெல்லை சென்று சேர்ந்ததும் கலெக்டர், கோயில் உள்ள பகுதியான இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டா போட்டு கொடுத்துவிட்டார். இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது. சுவாமியின் தெய்வ நிலை பெற்ற ஆண்டு 1908. அன்றிலிருந்து மக்கள் ஏரலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இது குறித்து ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர், 1916ம் ஆண்டு எழுதிய அரசு குறிப்பேட்டில் கூறியதாவது. 


ஏரல் நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து சேர்மனாக இருந்த அருணாசல நாடார் என்பவரது கோயில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றது. தீராத நோயால் கொடுமையடைந்த ஆதிதிராவிட பெண் ஒருத்தி கனவில் வந்த அருணாசல நாடார் தனது சமாதியைச் சுற்றி வந்தால் உனது நோய் குணமாகும் என்று கூறினார். அதன்படி அந்தப் பெண் சுற்றி வந்தாள். அவளது நோய் குணமானது. அந்த அற்புதத்தின் செய்தி சுற்றி வட்டாரத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. 


தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது. அங்கு சேர்மனின் போட்டோ பிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி அமாவாசை பௌர்ணமி தினங்களில் இவரை தரிசிக்க சாதி, மதம் பாராமல் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தாமிரபரணிக் கரையில்  கூடுகிறார்கள். பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக உண்ணுகிறார்கள். உடம்பிலும், கை, கால்களில் பூசி வருகின்றனர். அவர்களுக்கு உடனே குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர் திருநெல்வேலி கெஜட்டர் என்ற நூலில் எழுதியுள்ளார்.


மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் தான் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்து வந்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் பல நோய்கள் தீருகிறது. குறிப்பாக வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது. சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்களைத் தாண்டி விட்டது. ஆனால் தற்போதும் சுவாமிகள் பல விதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார். 



திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சற்குணம் என்பவர் ஒருசமயம் ஏரலுக்கு சுவாமியைக் கும்பிட குடும்பத்துடன் வந்துள்ளார். அவர்கள் தாமிரபரணியில் நீராடும் போது அவரது மகன் நீரில் முழ்கி விட்டான். உடனே அவர் ''சேர்மா! என் மகனை காப்பாற்று'' என குரல் எழுப்பியுள்ளார். அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி அவர் மகனை காப்பாற்றியுள்ளார். அதன் பின் அவர் மகனை அன்போடு கட்டி அரவணைத்து விட்டு காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி சொல்ல அவரை கூப்பிட்ட போது அவரைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப் போன்ற உருவத்தில் யாரும் இங்கே நடமாடவே இல்லை என்று அக்கம், பக்கத்தினர் கூறிவிட்டனர். 



ஆகவே மகனைக் காப்பாற்றியது சேர்மன் சுவாமிகளே என்று அவர் மட்டுமல்ல அனைவரும் நம்பினர். ஏரல் சுவாமி கோயிலில் மந்திர மை இடுவது வழக்கம். இந்த மந்திர மை ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் போன்ற பொருட்களைச் சேர்த்து யாகத்தில் நெய்யிட்டு எரித்து பஸ்பமாக்கி அதனை சுவாமியின் முன்னர் வைத்து வழிபாடு செய்து தருகிறார்கள். இந்த மந்திர மை பக்தர்கள் நெற்றியில் இடும் போது திருஷ்டி, பேய், பிசாசுகள் ஓடிப் போய்விடும். என்பது அனுபவ பூர்வமான நம்பிக்கை.


குலசேகரபட்டினம் அருணாசலப் பிள்ளை என்பவர் சுவாமி கோயிலுக்குத் தவறாமல் அரிசி தருவது வழக்கம். ஒரு முறை இரவில் தென்திருப்பேரையில் இருந்து அவர் அந்த அரிசியை ஒரு நார்ப் பெட்டியில் வைத்துக் கொண்டு ஏரலுக்கு வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் வந்த காரணத்தினால் தனியாக எப்படி அக்கரைக்குப் போவது என்று அவர் தவிக்க ஒரு பெரியவர் தனது பிரம்பை அவர் கையில் கொடுத்து இதைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் வா என்றார்.

பிள்ளை அந்த பிரம்பை பிடித்தவுடன் மறுகரை வந்து விட்டதை உணர்ந்தார். சரி நமக்கு உதவி செய்பவருக்கு ஏதாவது செய்யலாம் என்று அவர் அந்தப் பெரியவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை. உடனே இங்கே இருந்த பெரியவரை எங்கே என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார்". பெரியவர் யாரு வந்தா... நீங்க ஒத்தையில் வாறீங்களேன்னு தான் நாங்க இங்க நின்னு உங்களை பாத்துக்கிட்டு இருக்கோம்" என்று சொன்னார்கள். அப்படியென்றால் அவரை வழிநடத்தி வந்தது சேர்மன் சுவாமிதான் என்று அனைவரும் கருதினர். 


ஆதி சங்கரர் தமது முப்பத்தியிரண்டு வயதிலும், சுந்தரர் தனது பதினெட்டாவது வயதிலும், ஏரல் சேர்மன் சுவாமி தனது 28வது வயதிலும் இறைவனின் திருவருள் பெற்று தெய்வமானார்கள். இங்கு சித்திரைத் திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை.ஆகிய மூன்று திருவிழாக்கள் முக்கிய விழாக்களாகும். மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சுவாமியின் திருக் கோலம் இங்கு ராஜ திருக்கோலமாகும். நின்ற கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். இங்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது. 


திருநெல்வேலியிலிருந்து - திருச்செந்தூர் செல்லும் மெயின் ரோட்டில் தென்திருப்பேரையில் இருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஏரல் தாமிரபரணிக் கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் அருளைப் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/