என்எல்சி நிறுவனப் பணிகள் நடைபெற்று வரும் வளையமாதேவி கிராமத்திற்கு செல்ல மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கு போலீசார் அனுமதி மறுப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

என்எல்சி நிறுவனப் பணிகள் நடைபெற்று வரும் வளையமாதேவி கிராமத்திற்கு செல்ல மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கு போலீசார் அனுமதி மறுப்பு.

சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி நிறுவனப் பணிகள் நடைபெற்று வரும் வளையமாதேவி கிராமத்திற்கு செல்ல மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கு போலீசார் அனுமதி மறுப்பு. சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தார்.


சேத்தியாத்தோப்புஅருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களில் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, விடுதலை தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் குடந்தை அரசன் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இன்று வளையமாதேவி கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்திப்பதற்காக வந்தனர்.



அப்போது சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக வளையமாதேவி கிராமத்திற்கு செல்ல அனுமதி இல்லை என கூறினர். ஆனால் ஒரு சிலரையாவது மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்புங்கள் என கேட்டும் போலீசார் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து ஒன்றிய அரசையும் என்எல்சி நிறுவனத்தையும் கண்டித்து அனைவரும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நெய்வேலி அனல் மின் நிலையத்தின் தொடர் நடவடிக்கைகளால் இந்தப் பகுதியில் வாழக்கூடிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி நிலங்களை அழித்து வருகிறார்கள். கடந்த வாரம் விவசாய நிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டினார்கள். வள்ளலார் பிறந்த மண்ணில் இது போன்ற அராஜகங்களை மத்திய அரசின் துணையோடு என்எல்சி நிறுவனம் செய்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. 


இன்று காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்டு விட்டு வளையமாதேவி கிராமத்திற்கு செல்ல வந்தோம். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். 4 அல்லது 5 பேரை யாவது கிராமத்திற்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறியும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி போலீசார் மறுத்து விட்டனர். இந்தப் பகுதி மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக திரும்பிச் செல்கிறோம். விரைவில் அனைத்து மக்கள் பிரதிகளோடு வந்து இந்த மக்களை சந்தித்து விவசாயிகளையும் சந்திக்க உள்ளோம். 



என்எல்சி நிறுவனத்தால் நமக்கு குறைந்தபட்ச மின்சாரமே கிடைக்கிறது. இன்றைய கால கட்டத்தில் காற்றாலை, கடல் அலை, நீர்வீழ்ச்சி, சூரிய மின்சக்தி போன்ற பல வகைகளில் இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோன்ற நவீன முறைகள் வந்த பிறகும் நிலக்கரியை வெட்டி எடுத்து மின்சாரம் தயாரிப்பது தேவையற்றது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

      மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு இருக்கக் கூடாது. விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் இனியும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை அனுமதிக்க கூடாது என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad