புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியில், நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையால் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பெற்று வருகின்றன.


அவ்வகையில், 2023-24ஆம் ஆண்டுக்கு அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றன. மன்னர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி. ரமா அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ஜ. சபீர்பானு அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பெற்றன. பேராசிரியர் முனைவர் தி. ரமா, பேராசிரியர் முனைவர் த. மேனகா, பணிநிறைவு பெற்ற தமிழாசிரியர் திரு. கும. திருப்பதி, பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறைத் தலைவர் திரு. நெ.இரா. சந்திரன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.


அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு முற்பகல் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்டக் கருவூல அலுவலர் திருமதி செ. இராஜலெட்சுமி அவர்கள் பரிசு வழங்கினார். அண்ணல் அம்பேத்கர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டும், அவரை ஒரு சாராருக்குரிய தலைவராக எண்ணிவிடாமல் தேசியத்தலைவராகக் கருதி அவர் வலியுறுத்திய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனத்தெரிவித்தார். எதிர்கால சிற்பிகளாகிய மாணவச்செல்வங்கள் தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு நிறைய நூல்களை வாசிக்க வேண்டும் என்று கூறினார். 


மதர்தெரசா மருந்தியல் கல்லூரி மாணவி மு. வாணிஸ்ரீ முதல் பரிசும், ஆலங்குடி, அரசு கலைக்கல்லூரி மாணவர் சே. ராமவிஷ்ணு இரண்டாம் பரிசும், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி வீ. ஜெயலெட்சுமி மூன்றாம் பரிசும் பெற்றனர். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பிற்பகல் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மன்னர் கல்லூரி முதல்வர் முனைவர் அ.சி. நாகேஸ்வரன் அவர்கள் பரிசு வழங்கினார். பேச்சாற்றல் மிக்கவரை எவரும் வெல்ல இயலாது என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அதற்கு சிறந்த சான்று என்றும், அப்பேச்சாற்றலே அவர் ஆட்சிக்கட்டில் ஏற உதவியது என்றும் தெரிவித்தார்.


இன்றைய இளந்தலைமுறையினர் அறிவியல் தொழில்நுட்பம் மூலம் நிறைய உள்வாங்கிக்கொண்டாலும், அவற்றை சிறப்பாக பேச்சாற்றல் போன்ற திறமைகள் மூலம் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி சஸ் ரீனாபிர்தௌஸ் முதல் பரிசும், ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரி மாணவி செ. ஜோதி இரண்டாம் பரிசும், அக்ஸீலியம் கலை, அறிவியல் கல்லூரி மாணவி ஜெ. யமுனா மூன்றாம் பரிசும் பெற்றனர். நிறைவாக தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர் திரு. கி. சுப்புராமன் நன்றியுரையாற்ற போட்டிகள் இனிதே நிறைவுற்றன.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad