கனமழை அறிவிப்பை தொடர்ந்து தென்பெண்ணையாறு கரையோரப் பகுதிகளில் பாதிப்பு தென்பெண்ணையாற்றுச் ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட சாலை, ஓம்சக்தி நகர், கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா ஆற்று முகத்துவாரம், தேவணாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சாத்தனூர் அணையிலிருந்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கியின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பான மற்றும் தாழ்வானப் பகுதியிலிருந்து மேட்டுப் பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய பாலங்கள் மற்றும் ஏரிகளை ஆய்வு செய்து, அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பகண்டை மற்றும் கடலூர் பகுதிகளில் கடந்தமுறை ஏற்பட்ட பாதிப்புகள்போல வருங்காலங்களில் நிகழாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் கரையினை பலப்படுத்துவதற்கு மணல் மூட்டைகள் இருப்பு வைத்திடவும், தேவைப்படும் இடங்களுக்கு கொண்டுசெல்ல வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியான தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தென்பெண்ணையாற்று சாலை, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, ஓம்சக்தி நகர் பகுதிகளில் கடந்த முறை ஆற்றங்கரை உடைந்து வெள்ளநீர் குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றினை போர்க்கால அடிப்படையில் சீர்செய்திடவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்காலிக நடவடிக்கையாக மணல் மூட்டைகள் கொண்டு கரைப்பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்தமுறை 39 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதில் பகண்டை பகுதியில் 20 இடங்களிலும், இதரப் பகுதிகளில் 19 இடங்களில் உடைப்பு ஏற்பட்டன. அவற்றில் 10 இடங்கள் சீர்செய்யப்பட்டது. மற்ற இடங்களில் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணிகளை விரைந்து முடித்திட கூடுதலான ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையையொட்டி நிவாரண முகாம்கள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிக்கான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்களது குறைகள், தேவைகள் தெரிவித்திட மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதில் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்பெண்ணையாற்று நீர் தாழங்குடா ஆற்று முகத்துவாரம், தேவணாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதிகளில் கடலில் கலந்துவருகிறது. அங்கு அடைப்பு இல்லாமல் கடல்நீர் ஆற்றுக்குள் புகாதவண்ணம் கண்காணித்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து பாதுகாத்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு வருவாய் கோட்டாட்சியர் செல்வி அபிநயா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக