குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்


வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில்  ரூ.10,42,500 மதிப்பீட்டில் 5 எண்ணிக்கையிலான குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கினார்



கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வளாகத்தில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முன்னதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட 5 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தலா ரூ.2,08,500 வீதம் மொத்தம் ரூ.10,42,500 மதிப்பீட்டிலான குப்பை சேகரிக்கும் வாகனங்களை  வழங்கினார்.


பின்னர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், அரசால் செயல்படும் திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் எண்ணற்ற உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலூர் நகராட்சி, பொதுப்பணித் துறை கட்டடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு), நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, தாட்கோ, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், கூட்டுறவுத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் நிலை குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


வேளாண்மை தொழில் சார்பில் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்திட வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை பாதுகாப்புடன் வைத்திடவும், சரியான விலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்பனை செய்திடவும், மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளை சிறப்பாக செயல்படுத்தி, விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட நெல் அறிவடை இயந்திரங்களை முழு அளவில் குறைந்த வாடகைக்கு வழங்கிட வேண்டும். 


நீர்வளத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, நடுபரவனாற்றில் தடுப்புச்சுவர் கட்டும் பணி, சொக்கன்கொல்லை வடிகாலில் ஒழுங்கியம் மறுகட்டுமான பணி, பெருமாள் ஏரி தூர்வாரும் பணி, அருவாள்மூக்கு கடைமடையில் ஒழுங்கியம் அமைக்கும் பணி, விருதாச்சலம்-சேலம் நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் தற்போதைய நிலை, நகர் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுவரும் மேம்பால பணிகளின் நிலைக் குறித்தும் கேட்டறியப்பட்டது. 


வடலூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் 95% முடிவுபெற்று பயன்பாட்டிற்கு திறக்கப்படும் நிலையில் உள்ளது. எரிவாயு தகனமேடை பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள், சாலைகளில் வண்ணக்கற்கள் பதிக்கும் பணிகள், சாலை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றது. பேரூராட்சி பகுதியில் 86 பணிகளில் 64 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 


தாட்கோ மூலம் இதுவரை 23 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் மூலம் 340 பயனாளிகளுக்கு ரூ.26.30 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது. நியாயவிலைக் கடைகள் கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. கோடைகாலம் என்பதால் சீரான மின் அழுத்தத்துடன் கூடிய மின்விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மின்தடை ஏற்படாமல் மின்விநியோகம் செய்திட புதிய மின் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துதரும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இதுவரை கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் நிலை, வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுமானத்தொகை குறித்தும், மேலும் தெரு மின்விளக்குகள், கிராம சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கும் பணி, வீடுகள் பழுதுபார்க்கும் பணி, பல்வேறு திட்டங்களின் கீழ் எடுத்துள்ள பணிகள், முடிவுற்ற பனிகள், நிலுவை பணிகளின் நிலை குறித்தும், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட பயனாளிகள், பட்டா வேண்டி நிலுவையிலுள்ள மற்றும் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


குறிஞ்சிப்பாடியில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் அமைய உள்ளது. பூவாணிக்குப்பம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டுவெளி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 166 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 


மேலும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில்கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும்,  தகுதியுள்ள பயனாளிகள் யாரையும் விடுபடால் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கொண்டு சேர்த்திட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.


ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் இரா.சரண்யா  மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad