“பேருந்து வராத கிராமம்!” – நடைபயணத்தில் மனு அளித்த மக்கள், இனிமேல் ஒளி பாயுமா என்ற எதிர்பார்ப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

“பேருந்து வராத கிராமம்!” – நடைபயணத்தில் மனு அளித்த மக்கள், இனிமேல் ஒளி பாயுமா என்ற எதிர்பார்ப்பு!


தரங்கம்பாடி, ஜூன் 16-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர்–செம்பனார்கோவில் வழித்தடத்தில் உள்ள பத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அரசு பேருந்து வசதியின்றி கடும் அவதியில் உள்ளனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க ராமன்கோட்டத்தில் இருந்து கன்னங்குடி வரை 100க்கும் மேற்பட்ட மக்கள் பெண்கள், முதியோர், மாணவர்கள் என அனைவரும் நடைபயணம் மேற்கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


ஓடக்கரை, நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், ரவணையன்கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூர், வெள்ளத்திடல் உள்ளிட்ட கிராமங்கள், திருக்கடையூர் மற்றும் செம்பனார்கோவிலுக்கு இணைக்கும் சாலையைக் கொண்டுள்ளன. எனினும், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வரை இயக்கப்பட்ட ஒரே ஒரு மினி பேருந்தும் திடீரென நிறுத்தப்பட்டதால், இந்த கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள் ஆகியோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


மினி பேருந்து இயக்கப்படவில்லை என்பதுடன், சுதந்திர இந்தியா உருவானது முதல் இன்றுவரை கூட, இந்த வழித்தடத்தில் முழுமையான அரசு பேருந்து சேவை அமையவில்லை என்பது கவலையளிக்கிறது. தமிழக அரசின் மகளிர் பேருந்துகள் திட்டம் இயங்கும் நிலையில் கூட, இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் இச்சேவையிலிருந்து வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மக்கள் எழுப்பிய இந்த கோரிக்கையை ஏற்று, சாலை வசதியும் பேருந்து நிறுத்த நிலையமும் இருந்தும் எதற்காக பேருந்து இயக்கப்படவில்லை என்பதற்கு பதில் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராலயத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்ட இந்த மக்கள் கூட்டம், “எங்களுக்கும் அரசு பேருந்து வசதி வேண்டும்” என வலியுறுத்தினர்.


இப்போது அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் அந்தப் பகுதி மக்கள் உள்ளனர். “இன்னும் எத்தனை காலம் நடைபயணமே நம்பிக்கையாக இருக்க வேண்டும்?” என்ற கேள்வியோடு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad