காட்டுமன்னார்கோயில் அருகே ஆசிரியர் இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி. ஆசிரியரை நியமிக்க கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

காட்டுமன்னார்கோயில் அருகே ஆசிரியர் இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி. ஆசிரியரை நியமிக்க கோரிக்கை.



புவனகிரி-ஜூன்05 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தொருக்குழி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி 1937 முதல் இயங்கி வருகிறது. தற்போது பள்ளிக்கு வயது 88 ஆண்டுகள் கடந்து வருகிற நிலையில் தொடக்கத்தில் 200 மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளனர்.  தற்போது பள்ளியில் முப்பது மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே வகுப்பு எடுத்து வந்த நிலையில்அவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வில் சென்றுவிட்டார்.  விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாள் பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் தாங்களாக வந்து வகுப்பறையில் அமர்ந்து தாங்களாகவே கலைந்து சென்றுள்ளனர். இரண்டாவது நாளாகவும் அதே நிலை நீடித்தது. இப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமி காந்தன் டிசி வழங்குவதற்காக மாணவர்கள் பெற்றோர்கள் அழைத்ததன் பேரில் பள்ளிக்கு வந்த நிலையில் ஆசிரியர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உத்தரவு நகல் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டது. அதில் தொருக்குழி பள்ளி உட்பட மாவட்டத்தில் 12 ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில் ஏற்கனவே வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டிருந்தது. ஆனால் தொருக்குழி பள்ளிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட ஆசிரியர் இதுவரை பள்ளியில் பொறுப்பு ஏற்கவில்லை. இதனால் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக இருந்து வருவதாகவும் வேதனையோடு தெரிவித்தார். உடனடியாக இந்தப்பள்ளிக்கு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad