கடந்த 12.06.2025 அன்று, திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி, ஒரு காரின் கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் இணையத்தில் பரவி, அதனைத் தொடர்ந்து நாங்குநேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். அதன்படி, நாங்குநேரி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், போலீசாரால் கைப்பற்றப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (வயது 30) மற்றும் இசக்கி ராஜா (வயது 26) ஆகிய இருவரும், குற்றத்தில் ஈடுபட்டது, உறுதி செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் கண்டறிந்து கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி சாலைகளில் சாகச முயற்சிகளில் ஈடுபடுவது, அவர்களது உயிருக்கு பெரிய அபாயம் ஏற்படுத்தக்கூடியது என்பதை உணர வேண்டும். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்க வேண்டுமெனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக