திருப்பூர் 15-வேலம்பாளையம் நகர பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம், திலகர் நகர், அ. புதூர், சிறுபூலுவபட்டி ரேசன் கடைகளில் ஆயிரக் கணக்கான ரேசன் கார்டுகள் உள்ள நிலையில், இங்கு வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறப்பதும், தற்போது அரசு கொடுத்துள்ள ப்ளூடூத் இணைப்பு எடைக் கருவியினால் ஒரு நபருக்கு சுமார் 30 நிமிடநேரம் வரை ஆவதால் கடைக்குட்பட்ட கார்டுதாரர்கள் அனைவரும் பொருட்கள் வாங்க மாதத்திற்கு 3 முதல் 4 நாட்கள் தங்கள் வேலையைக் கெடுத்துக் கொண்டு, வருமான இழப்புடன் கடைகளில் காலை முதல் மாலை வரை காத்திருக்கும் நிலையும், அப்படி காத்திருந்த போதும் கை ரேகை ஸ்கேன் ஆகவில்லை / கருவிழி ஸ்கேன் ஆகவில்லை என திருப்பி அனுப்புவதுமாக உள்ளதும், முழுமையான பொருட்களும் இல்லாமல், தரமானதாகவும் இல்லாமல் வழங்குவதும் என ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கி வாழ்க்கையை நகர்த்தும் எளிய உழைக்கும் மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இதனை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுப்பர்பாளையம் கிளைகளின் சார்பில் அனுப்பர்பாளையம் ரேசன் கடை முன்பு, நகரக்குழு உறுப்பினர் ஆ.கிருஷ்ணவேணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், கடைக்கு முழுநேரப் பணியாளர் நியமித்து, எல்லா நாட்களும், எல்லாப் பொருட்களும் வழங்க வேண்டும். முதியோர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் கால்கடுக்க நாள்முழுவதும் நிற்க வைக்கும் பிஓஎஸ் எந்திரம் மூலம் எடைபோடும் நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கடைகள் சரியான நேரத்திற்குத் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பொருட்களை தரமான முறையில் வழங்க வேண்டும். சரியான அளவில் பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர்கள் ஆர்.சுகுமார், பி.சின்னச்சாமி, என்.விஸ்வநாதன், மாதர் கிளைச் செயலாளர் சாந்தி, சிஐடியு நிர்வாகிகள் அ.ஆறுமுகம், என்.குபேந்திரன், தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து, வளர்மதி கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் புவனேஸ்வரி அவர்கள் நேரில் வந்து, கார்டுதாரர்கள் சொன்ன குறைகளைக் கேட்டுக் கொண்டு, வரும் திங்கள் முதல் அனுப்பர்பாளையம் ரேசன் கடைக்கு முழுநேரப் பணியாளர் நியமனம் செய்வதாக உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக