கோத்தகிரியில் போதை ஒழிப்பு கருத்தரங்கு மற்றும் பேரணி-
கோத்தகிரி ஒரசோலை லயன்ஸ் அறக்கட்டளை சார்பாக உலக போதை ஒழிப்பு நாள் முன்னிட்டு பேரணி, மனித சங்கிலி, கருத்தரங்கு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோத்தகிரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். 19 ஊர் தலைவர் ராமா கவுடர் அவர்கள் முன்னிலை வகித்தார். கோத்தகிரி வட்டாரத்தைச் சேர்ந்த தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் துவங்கிய பேரணி பஸ் நிலையம், ராம்சந் சதுக்கம், காமராஜர் சதுக்கம் வழியாக மார்க்கெட் திடலை அடைந்தது. மாணவர்கள் போதை ஒழிப்பு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றார்கள். பின்னர் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சியில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு ஜீவானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். போதைப் பொருட்கள் ஒழிக்கும் முயற்சியில் பொதுமக்களும் மாணவ சமுதாயமும் காவல்துறைக்கு உதவிட வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்தார். கோத்தகிரி பகுதியில் போதை பொருட்களை ஒழிப்பதில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது எனவும் கூறினார். சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே ஜே ராஜு அவர்கள் பேசும்போது கூறிய கருத்துக்களாவன -
சந்தோஷத்தை விரும்புவது மனித குலத்தின் இயற்கை. வரலாறு காலம் தொட்டு மனிதர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். போதைப் பொருட்கள் மற்றும் மது வகைகள் அனைத்திலும் உள்ள ரசாயன பொருட்கள் மனித மூளையில் டோபோமைன் என்ற சுரப்பியை தூண்டி காற்றில் மிதப்பது போன்ற உணர்வை தூண்டுகிறது. ஒருமுறை போதை பொருட்களை உட்கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் அத்தகைய சந்தோஷத்தை அனுபவிப்பதற்காக போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இத்தகைய ரசாயன பொருட்கள் மனிதர்களை போதை பழக்கத்திற்கு அடிமைப்படுத்துகிறது. ஒருமுறை போதை பொருட்களை உட்கொண்டவர்கள் நிரந்தரமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். மனித மூளை தான் நமது மனம் உடல் உறுப்புக்கள் அவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. போதைப் பொருட்கள் மனிதனுடைய மூளையை தாக்கி செல்களை செயலிழக்க வைக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மூளை செல்கள் மீண்டும் குணப்படுத்த முடியாத நிலையை அடைகின்றன. இந்த சூழ்நிலையில்தான் போதை பொருட்களுக்கு அடிமையான மனித மனித வாழ்க்கை சீரழிகிறது. இளைஞர்கள் ஒருமுறை சுவைத்துப் பார்க்கலாமே என்று போதைப் பொருட்களை எடுத்துக் கொள்பவர்கள் கூட அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் 50 சதவீதம் என ஒரு ஆய்வு கூறுகிறது . வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் போதை பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது தான் சிறந்தது. கம்பி மேல் நடக்கும் இந்த வித்தையில் கொஞ்சம் தவறினாலும் வாழ்க்கையின் நரகம் ஆகிவிடும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் விஸ்வ வித்யாலயா உறுப்பினர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகத்தை பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் திடல் ஆகிய பகுதிகளில் நடத்தினார்கள். முன்னதாக அறக்கட்டளையின் செயலர் சுரேஷ் நஞ்சன் அனைவரையும் வரவேற்றார். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி முரளி ராஜ் நந்தகுமார் மனோகரன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக